அஸ்வின் மட்டுமல்ல.. 6 இந்திய வீரர்கள் ஓய்வு..
ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்து இருக்கிறார். ஆனால், அவர் மட்டும் இந்த ஆண்டு ஓய்வை அறிவிக்கவில்லை.
மேலும், ஐந்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்த ஆண்டு ஓய்வை அறிவித்து உள்ளனர். இந்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளும், 3503 ரன்களும் குவித்து இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார்.
தனக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படாது என்பதை உணர்ந்த அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
இதற்கு முன் இந்த ஆண்டு ஷிகர் தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் ஓய்வை அறிவித்து இருந்தனர்.
அவர்கள் இருவரும் தங்களுக்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்து ஓய்வு முடிவை எடுத்து இருந்தனர்.
தினேஷ் கார்த்திக் 2024 ஐபிஎல் தொடரின் முடிவில் ஓய்வை அறிவித்தார்.
அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் தனக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதை அடுத்து அவர் ஓய்வை அறிவித்தார். மறுபுறம் ஷிகர் தவான் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாட முடிவு செய்தார்.
அதனால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அடுத்து 2024 டி20 உலக கோப்பையை இந்தியா வென்ற பிறகு மூன்று ஜாம்பவான்கள் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தனர்.
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
உலகக் கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் தாங்கள் ஓய்வு பெறுவதாக அவர்கள் கூறினர்.
2024 ஆம் ஆண்டு விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று இந்திய வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகிய மூன்று வீரர்கள் ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து உள்ளனர்.