பள்ளியில் மாணவிக்கு கத்திக் குத்து: நார்விச்சில் 16 வயது சிறுவன் அதிரடி கைது!
இங்கிலாந்தின் நோர்விச் (Norwich) நகருக்கு அருகில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில், ஒரு மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் தாக்குதல் தொடர்பாக அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை சுமார் 10:24 மணியளவில்,நோர்விச் (Norwich) தோர்ப் செயின்ட் ஆண்ட்ரூ (Thorpe St Andrew School) பள்ளியில் ஒரு மாணவி தாக்கப்பட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

காவல்துறையினர் வருவதற்கு முன் தாக்குதல் நடத்திய அந்தச் சிறுவன் பள்ளியின் வேலியைத் தாண்டிக் குதித்துத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அடுத்த சில நிமிடங்களில் போலீசார் அந்தச் சிறுவனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
கத்திக் குத்துக்கு உள்ளான மாணவி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஏற்பட்ட காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல (Minor injuries) என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சிறுவன் மீது ‘கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தியதாக’ (GBH with intent) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் சிறுவன் தற்போது காவல்துறையினரின் விசாரணை மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்தவுடன் பள்ளி முழுவதும் ‘மூடப்பட்டு’ (Lockdown) . மாணவர்கள் அனைவரும் வகுப்பறைகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், அறிவுறுத்தப்பட்டனர். சுமார் மதியம் 1:15 மணி வரை இந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.





