வடக்கு மாணவர்களுக்கு ரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்பு
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் மற்றும் வடக்கு ஆளுநருக்கு இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு ரஷ்யத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறையாகும்.
இச்சந்திப்பின் போது, இலங்கைக்கு வரும் ரஷ்யச் சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை வடக்கு மாகாணத்திற்கும் ஈர்க்கும் வகையில் விசேட சுற்றுலாத் திட்டங்களை முன்னெடுக்குமாறு தூதுவர் ஆலோசனைகளை வழங்கினார்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர், வடக்கு மாகாணம் மிகவும் பாதுகாப்பான சூழலைக் கொண்டுள்ளதாகவும், ரஷ்ய முதலீட்டாளர்கள் இங்குள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், ரஷ்ய கலாசார நிலையத்தின் ஊடாக வடக்கு மாகாண மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்விப் புலமைப்பரிசில்களை அதிகரிப்பது குறித்தும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யாவையும் வடக்கின் அபிவிருத்தியில் இணைப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாக இச்சந்திப்பு பார்க்கப்படுகிறது.
சுற்றுலா மற்றும் கல்வித் துறையில் ரஷ்யாவின் ஒத்துழைப்பு கிடைப்பது வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





