என்.பி.பி. ஆட்சியில் பாதுகாப்பு உத்தரவாதம்: வடக்கில் முதலிட வருமாறு ஆளுநர் அழைப்பு!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று (21.01.2026) ஆரம்பமானது.
இந்த மாநாட்டை ‘த மனேஜ்மன்ட் கிளப்’ (TMC) – இலங்கை ஒழுங்கமைத்திருந்தது.
இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.
“கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது.
ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ நடைபெறுகின்றமை மிகப் பொருத்தமானது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தேசிய மொத்த உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,” – எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
” இலங்கை, பொருளாதார மீட்சியிலிருந்து நீண்டகால நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கத் தயாராகும் இத்தருணத்தில், இந்நிகழ்வானது மிகச் சரியான நேரத்தில் நடைபெறுகின்றது.
எந்தவொரு மாகாணமும் பின்தங்கிவிடக் கூடாது என்ற அடிப்படையில், னாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ‘அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம்’ என்ற தூரநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழேயே இம்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.
எமது வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், வடக்கு மாகாணமானது எப்போதும் ‘சிறப்புக்கான ஒரு நுழைவாயிலாக’ திகழ்ந்து வந்துள்ளது. அந்தப் பெருமையை மீட்டெடுப்பதே இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.
விவசாயம் மற்றும் கடற்றொழில், சுற்றுலாத்துறை, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம், மற்றும் வலுசக்தி ஆகிய நான்கு மூலோபாயத் தூண்களில் கவனம் செலுத்துவதன் மூலம், எமது இளைய சமூகத்தின் திறமையையும், மூத்தவர்களின் அனுபவத்தையும், சர்வதேச மூலதனம் மற்றும் புத்தாக்கங்களுடன் இணைப்பதற்கான ஒரு வரைபடத்தை நாம் உருவாக்குகின்றோம்.
இன்று மேற்கொள்ளப்படும் முதலீடுகள், வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் நிலையான வேலைவாய்ப்புகள், துடிப்பான தொழில் முயற்சிகள் மற்றும் செழிப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் எனவும் ஆளுநர் அழைப்பு விடுத்தார்.





