உயிரிழப்புகளுக்கு பின்னரும் ரஷ்யாவிற்கு கூடுதல் படைகளை அனுப்ப தயாராகும் வட கொரியா ;தென் கொரியா
உக்ரேனியப் படைகளை எதிர்த்துப் போரிட ரஷ்யாவுக்கு அதிக படைகளை அனுப்ப வட கொரியா தயாராகி வருவதாகச் சந்தேகிப்பதாக தென் கொரிய ராணுவம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உடனடி நடவடிக்கைக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றாலும் வேவு செயற்கைக்கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பாய்ச்ச வட கொரியா தயாராகி வருகிறது என்றும் அறிக்கை கூறியது.
ஜனவரி மாதத்தில், உக்ரேனிய அதிபர் வோல்டிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் இரு வடகொரிய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறினார்.
ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் மாஸ்கோ படைகளுக்கு ஆதரவாக பியோங்யாங் கிட்டத்தட்ட 11,000 வீரர்களை நிறுத்தியுள்ளது என்று உக்ரேனும் மேற்கத்திய நாடுகளும் தெரிவிக்கின்றன.
போரில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று கிவ் கூறியது.
வடகொரியப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவல்களை மாஸ்கோவும் பியோங்யாங்கும் ஆரம்பத்தில் நிராகரித்தபோதிலும் ரஷ்ய அதிபர் புட்டின் அக்டோபரில் வடகொரியப் படையினர் ரஷ்யா வந்திருப்பதை மறுக்கவில்லை. அத்தகைய படைகளை அனுப்புவது சட்டப்படி சரியானதே என்று வடகொரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
2024 ஜூனில் புட்டின் பியோங்யாங்கிற்குச் சென்ற பின்னர் இருநாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. அப்போது, “விரிவான கேந்திர முக்கியத்துவப் பங்காளித்துவம் ஒப்பந்தத்தில்” இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர், இதில் பரஸ்பர தற்காப்பு ஒப்பந்தமும் அடங்கும்.