ஆயுதங்களுக்கு பணம் பறிப்பதற்காக அமெரிக்க நிறுவனங்களில் தொழிலாளர்களை நியமித்ததாக வடகொரியா மீது குற்றச்சாட்டு

ஆயுதம் வாங்குவதற்காக அமெரிக்க நிறுவனங்களில் வர்த்தக ரகசியங்களைத் திருட வடகொரியா மேற்கொண்ட திட்டம் குறித்து தகவல் அளிப்போருக்கு US$5 மில்லியன் (S$6.7 மில்லியன்) சன்மானம் வழங்கப்படுவதாகவும் அமெரிக்கா அறிவித்து உள்ளது.
அமெரிக்க நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் வடகொரிய தொழில்நுட்ப ஊழியர்கள் நிறுவனங்களின் வர்த்தக ரகசியங்களைத் திருடி, அவற்றை வெளியிடப்போவதாக அந்நிறுவனங்களின் முதலாளிகளிடம் மிரட்டி பணம் பறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
மிரட்டலுக்கு அடிபணிந்து அமெரிக்க நிறுவனங்களின் முதலாளிகள் அளித்த தொகை வடகொரியாவின் ஆயுதக் கொள்முதல் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது.
சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் அமெரிக்க நிறுவனங்களிலும் லாப நோக்கமற்ற அமைப்புகளிலும் வடகொரிய ஊழியர்கள் கணினித் தொழில்நுட்ப வேலைகளில் அமர்த்தப்பட்டதாக அமெரிக்கத் தற்காப்புத் துறை தெரிவித்து உள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுவரை 130 வடகொரிய ஊழியர்கள் அவ்வாறு வேலை செய்து குறைந்தபட்சம் US$88 மில்லியன் தொகையை மிரட்டிப் பெற்றதாகவும் அது கூறியது.
அமெரிக்க முதலாளிகள் பயத்துடன் அளித்த தொகையின் ஒரு பகுதி வடகொரிய அரசாங்கத்திற்குச் சென்றதாகவும் அதனை பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்க பியோங்யாங் பயன்படுத்தியதாகவும் வாஷிங்டன் தெரிவித்துள்ளது.சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
பொருளியல் தடை விதிக்கப்பட்ட இரு வடகொரிய நிறுவனங்கள் மீதான தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்ட அமெரிக்க தற்காப்புத் துறை, அந்நிறுவனங்களே தகவல் திருடும் ஊழியர்களைக் கையாண்டதாகக் கூறியது.