செலவு குறைப்பின் ஒரு பகுதியாக சீனாவில் 2,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது நோக்கியா
நோக்கியா நிறுவனம் சீனாவில் ஏறக்குறைய 2,000 ஊழியர்களை அல்லது அங்குள்ள தனது ஊழியர்களில் ஐந்தில் ஒருவரை ஆட்குறைப்பு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், மேலும் 350 ஊழியர்களை ஐரோப்பாவில் ஆட்குறைப்பு செய்யும் திட்டம் அதனிடம் இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
அந்த 350 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது தொடர்பான ஆலோசனையை நோக்கியா தொடங்கி இருப்பதை அதன் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.இருப்பினும், சீனாவில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு இருப்பது பற்றி அவர் வாய்திறக்கவில்லை.
2023 டிசம்பர் மாத நிலவரப்படி, சீனாவில் 10,400 ஊழிர்களும் ஐரோப்பாவில் 37,400 ஊழியர்களும் நோக்கியா நிறுவனத்தில் வேலை செய்ததாக அதன் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
2026ஆம் ஆண்டுக்குள் 14,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து 800 மில்லியன் யூரோ (S$1.14 பில்லியன்) முதல் 1.2 பில்லியன் யூரோ வரை செலவைக் குறைக்க இருப்பதாக கடந்த ஆண்டு நோக்கியா தெரிவித்து இருந்தது.
அதன் ஒரு பகுதியாக தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெற்று இருப்பதாகக் கூறப்படுகிறது.