தங்கள் நாட்டை மதிக்கும் வரை டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை இல்லை – கனடா பிரதமர் திட்டவட்டம்

கனடாவை அமெரிக்கா இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும்வரையில் பேச்சுவார்த்தை இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகுப்புகளையும், வளத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கார்னி அறிவித்தார்.
கனேடிய போர் அருங்காட்சியகத்தில் அவர் பேசியதாவது, வர்த்தகப் போரினால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதால், அதனைத் தடுக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்புவார்.
அவர்கள் எப்போது வந்தாலும் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும், இறையாண்மை கொண்ட நாடாக கனடாவுக்கான மரியாதை கிடைக்கும்வரையில் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடக்காது என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக கனடா இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், கனடா அரசு அதனை மறுத்து வருகிறது.
இதனிடையே, கனடா மீது அமெரிக்கா அதிகளவிலான வரி விதித்ததையொட்டி, அமெரிக்கா வர்த்தகப் போரை விரும்புவதாக பலரும் கூறினர்.