வடக்கில் அபிவிருத்திகளுக்கு தடை வேண்டாம்: ஆளுநர் பணிப்பு!
வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நிதியொதுக்கீடுகளைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றியும், தடங்கலின்றியும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதைய நெருக்கடியான புறச்சூழலில் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதில் காணப்படுகின்ற சவால்கள் மற்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) காலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன் :
‘எந்தவொரு திணைக்களமும் தமக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதை எக்காரணம் கொண்டும் இடைநிறுத்தக் கூடாது.
அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள விசேட வழிகாட்டல்களைப் பின்பற்றி, நாம் திட்டமிட்ட எமது வழமையான அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி முன்னெடுக்க முடியும்.
தற்போதைய புறச்சூழலைக் காரணம் காட்டி, அபிவிருத்தி வேலைகளைச் செய்வதில் அதிகாரிகள் எந்தவொரு தயக்கத்தையும் காண்பிக்கத் தேவையில்லை.

ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்துங்கள். பல திணைக்களங்கள் தமது வேலைகளுக்கான கேள்வி மனுக்களை கோரியுள்ளன.
எஞ்சியுள்ள வேலைகளுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டுப் பணிகளையும் விரைந்து நிறைவுசெய்து, அவற்றுக்கான கேள்வி மனுக்களை உடனடியாகக் கோருவதற்குப் பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என ஆளுநர் பணித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் தற்போது கள மட்டத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் நிலைமைகள் குறித்து ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
குறிப்பாக, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், குறிப்பாகப் பின்தங்கிய பிரதேசங்களுக்குக் களப் பயணங்களை மேற்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களுக்கான மதிப்பீடுகளைத் தயாரிக்கும் அலுவலர்களுக்குப் போதியளவு எரிபொருள் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்தங்கிய பிரதேசங்களில் மிகக் குறைந்தளவான எரிபொருள் நிரப்பு நிலையங்களே காணப்படுவதால், கடமையிலீடுபடும் உத்தியோகத்தர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் நடைமுறை இடர்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், வீதி அபிவிருத்திப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொண்ட ஒப்பந்ததாரர்கள், கட்டுமான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இன்னும் தமது பணிகளை ஆரம்பிக்கவில்லை எனவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் விலை அதிகரிப்பும், திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகளில் நேரடியான தாக்கத்தைச் செலுத்துவதாகவும் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.

திணைக்களத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட இக்கருத்துக்களை உள்வாங்கிய ஆளுநர், அத்தியாவசியக் களப் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் விநியோகச் சிக்கலைத் தீர்ப்பதற்கு, அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் உள்ளிட்ட பல அரச உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





