தோனிக்கு இடமில்லை – சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த யுவராஜ் சிங்!
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ஆல்டைம் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங், சமீபத்தில் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் இந்திய சாம்பியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி பட்டத்திற்கு அழைத்துச்சென்றார்.
சனிக்கிழமை பர்மிங்காமில் நடந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனது.
இதற்கிடையில், பேட்டியொன்றில் பேசியிருக்கும் யுவராஜ் சிங் தன்னுடைய ஆல்டைம் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வுசெய்துள்ளார். அதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இரண்டு பெயர்களும் இடம்பெற்ற போதிலும், எம்எஸ் தோனியை தனது அணியில் குறிப்பிடாதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இந்திய அணியை இரண்டுமுறை தனியொரு ஆளாக கோப்பைக்கு அழைத்துச்சென்ற யுவராஜ் சிங், தன்னுடைய தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கை தேர்வுசெய்தார். 3வது மற்றும் 4வது வீரராக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றனர். 5வது வீரராக ஏபிடி வில்லியர்ஸும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கில்கிறிஸ்ட்டையும் தேர்வுசெய்தார்.
ஆண்ட்ரோ ஃபிளிண்டாப் ஒருவர் மட்டுமே ஆல்ரவுண்டராக இடம்பிடித்தார், நான்கு பவுலர்களாக ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், கிளென் மெக்ராத் மற்றும் வாசிம் அக்ரமை தன்னுடைய அணியில் சேர்த்துக்கொண்டார். இறுதியாக மாற்றுவீரர் யாராவது இருப்பார்களா என்ற கேள்விக்கு 12வது வீரராக தன்னுடைய பெயரை கூறினார் யுவராஜ் சிங்.
தன்னுடைய பேட்டிங் பார்ட்ரனர் மற்றும் இந்திய அணியை 3 முறை கோப்பைக்கு வழிநடத்திய வெற்றிக்கேப்டன் மகேந்திரசிங் தோனியின் பெயரை குறிப்பிடாதது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.