உள்கட்டமைப்பு ஊழல் விசாரணையில் யாரும் தப்பமாட்டார்கள் : பிலிப்பைன்ஸின் மார்கோஸ்

நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் ஊழல் நடந்துள்ளதால் அதன் அரசு சார்பற்ற விசாரணையில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜுனியர் தெரிவித்துள்ளார்.
கடந்த கால ஊழல் விசாரணைகளில் இருந்து இது மாறுபட்டிருக்கும் என வெறுப்படைந்துள்ள பொதுமக்களுக்கு அதிபர் உறுதியளித்தார். சம்பந்தப்பட்டோர் யாராக இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் கூறினார். விசாரணையை நடத்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய உள்விசாரணையில் பலம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது. அண்மைய மாதங்களில் ஏற்பட்ட புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டப் பொதுப் பணிகளில் நடந்துள்ள ஊழல்களை ஆணையம் விசாரிக்கும்.
முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபரின் தந்தையுமான ஃபெர்டினண்ட் மார்கோஸ் சீனியர், ராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்த நாட்டின் இருண்ட நாளாகக் கருதப்படும் செப்டம்பர் 21ம் திகதியன்று ஊழலை எதிர்த்துப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேவாலய சமயத் தலைவர்களும் சமூகக் குழுக்களும் அந்தப் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர். இந்தோனீசியாவிலும் நேப்பாளத்திலும் நடந்த போராட்டங்கள் வன்முறையில் முடிந்ததை நினைவில்கொண்டு, அமைதியான வகையில் தங்களின் குரல்களை வெளிப்படுத்துமாறு அதிபர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
வெள்ளக் கட்டுப்பாட்டுக்கென 2022ஆம் ஆண்டுமுதல் $9.52 பில்லியன் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு, அவற்றில் 15% குத்தகையாளர்கள் எடுத்துவிட்டதாக அதிபர் மார்கொஸ் குறிப்பிட்டுள்ளார். சில திட்டங்கள் செயல்படுத்தப்படாமலேயே நிதி பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.