சிறுதானியங்களை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
சிறு தானியங்களில் உள்ள சத்துக்கள் ,சாப்பிடும் முறை, யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் தினமும் சாப்பிடும் அரிசி கோதுமை தானிய வகைகளைச் சார்ந்ததாகும். சிறுதானியங்கள் என்பது சிறு விதைகளாக இருக்கும். ஏழு வகை சிறுதானியங்கள் உள்ளது கம்பு ,ராகி, திணை, சாமை, வரகு ,குதிரைவாலி ,சோளம் போன்றவை ஆகும்.
சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள்;
அரிசியைவிட சிறு தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் உள்ளது .குறிப்பாக அரிசியில் இல்லாத விட்டமின்ஸ் மற்றும் தாது சத்துக்களும் சிறுதானியத்தில் அதிகம்.
அது மட்டுமல்லாமல் பாஸ்பரஸ் அரிசியை விட சிறுதானியத்தில் இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. மேலும் சிங்க், மெக்னீசியம், மாங்கனிசு ,செலினியம் போன்ற சத்துக்களும் அதிக அளவில் உள்ளது.
சிறுதானியத்தில் எது சிறந்தது?
ஒவ்வொரு சிறு தானியங்களும் ஒவ்வொரு சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. குறிப்பாக கால்சியம் சத்து மற்ற சிறு தானியங்களை விட ராகியில் அதிகம் உள்ளது. அரிசியுடன் ஒப்பிடும்போது 20 மடங்கு கால்சியம் அதிகம் உள்ளது. அதேபோல் பாஸ்பரஸ் சத்து இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.
இரும்புச்சத்து குதிரைவாலி மற்றும் கம்பில் அதிகம் உள்ளது. இதுபோல் ஒவ்வொரு சத்தும் ஒவ்வொரு சிறுதானியத்தில் அதிகம் நிறைந்துள்ளது. அதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறுதானியம் என்ற வீதத்தில் ஏழு நாட்களும் ஏழு சிறுதானியம் என்று காலை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்தது.
சமைக்கும் முறை;
என்னதான் சிறு தானியத்தில் நன்மைகள் பல இருந்தாலும் இது உணவுகளில் உள்ள சத்துக்களை நம் உடல் உறிஞ்ச விடாமல் தடுக்கும் .அதற்குக் காரணம் அதில் உள்ள ரசாயனம் தான் ஆன்டி நியூட்ரிசனல் ஃபேக்டர் என்று கூறப்படுகிறது. அதனால் சிறு தானியங்களை கழுவி ஊறவைத்து வேகவைத்து வடித்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும் போது அதன் முழு சத்துக்களையும் பெறலாம்.
சிறுதானியத்தின் பயன்கள்;
சிறுதானியங்களில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது .அதேபோல் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேபோல் கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவு அதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
சிறுதானியங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். குறிப்பாக குதிரைவாலி சிறந்த உணவாக கூறப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சிறுதானியங்களில் நல்ல பாக்டீரியாவை வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மை உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது .மேலும் மலச்சிக்கல் வராமலும் தடுக்கிறது.
உடல் பருமன் உள்ளவர்கள் சிறு தானியங்களை உணவாக எடுத்துக் கொள்ளும் போது எடை குறையும். இதில் கரையும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் இதயத்தில் கொழுப்பு கட்டிகள் சேருவதை தடுக்கிறது.
எலும்புகளின் வளர்ச்சிக்கும் மிகச் சிறந்தது, எனில் ராகியில் அதிக அளவு கால்சியம் உள்ளது. மேலும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகம் உள்ளதால் கண்களுக்கும் சிறந்தது. ரத்த கொதிப்பு உள்ளவர்களும் சிறுதானியங்களை தினமும் எடுத்துக் கொள்ளும் போது ரத்த அழுத்தம் சீராக்கப்படுகிறது.
யார் சாப்பிடக்கூடாது?
சிறுதானியங்களில் காய்ஸ்ரோஜன் என்ற ரசாயனம் உள்ளதால் இது ஹார்மோன் உற்பத்தி ஆவதை தடை செய்கிறது. அதனால் தைராய்டு உள்ளவர்கள் மற்றும் தைராய்டுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் சிறுதானியங்களை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் .குறிப்பாக கம்பில் இந்த ரசாயனம் அதிகம் உள்ளதால் கம்பு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
என்னதான் சிறுதானியங்கள் அதிக பயன்களை கொடுத்தாலும் அதை நாம் முறையாக ஊற வைத்து சமைத்து சுழற்சி முறையில் எடுத்துக் கொள்வதுதான் சிறந்தது.