அரசியல் புயலாக மாறியுள்ள ஆங்கில பாடம்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று (05) கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தரம் ஆறு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு பதவியை வகிக்கும் பிரதமருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
பிரதமர் பதவி விலகவேண்டும் என பல கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. எனினும், பிரதமர் பதவி விலகவேண்டியதில்லை, விசாரணை நடக்கின்றது என அரச தரப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் அரசியல் போரை ஆரம்பித்துள்ளது.





