ஐரோப்பாவிலிருந்து ஆப்கானியர்களை நாடு கடத்த 20 நாடுகள் அழுத்தம்

ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ஆப்கானிஸ்தானியர்களை நாடு கடத்த 20 ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவுக்கு (EU Commission) கூட்டாக அழுத்தம் கொடுத்துள்ளன.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கட்டாயமாகவோ அல்லது விருப்பத்தின் பேரிலோ திருப்பி அனுப்ப வேண்டும் என 20 ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவுக்கு (EU Commission) கூட்டாக அழுத்தம் கொடுத்துள்ளன.
பெல்ஜியத்தின் புகலிடம் மற்றும் குடிவரவு அமைச்சர் அன்னிலீன் வான் போஸ்சுயிட் (Anneleen Van Bossuyt) தலைமையில், 19 உறுப்பு நாடுகள் மற்றும் நோர்வேயைச் சேர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து, இது குறித்து ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளன.
2021ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆப்கானிஸ்தானுடன் முறையான ஒப்பந்தம் இல்லாததால், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக்கூட நாடு கடத்த முடியவில்லை.
இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாதுகாப்புக்கும் அகதிகள் கொள்கையின் மீதான பொதுமக்கள் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று நாடுகள் வாதிடுகின்றன.
ஆபத்து விளைவிப்பவர்கள் அல்லது குற்றவாளிகளாகக் கருதப்படும் நபர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஜெர்மனி ஏற்கனவே ஆப்கானிஸ்தானியர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம், ஜெர்மனி அரசாங்கம் 81 ஆப்கானிஸ்தானியர்களை விமானம் மூலம் நாடு கடத்தியது. இதை மற்ற ஐரோப்பிய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று ஜெர்மனி எதிர்பார்க்கிறது.
எனினும், ஆப்கானிஸ்தான் இன்னமும் திரும்பச் செல்லப் பாதுகாப்பற்ற நாடு என ஐ.நா.வின் அகதிகள் அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
தலிபான் ஆட்சியில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் ஆவணப்படுத்தப்பட்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.