பங்ளாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களில் ஒன்பது பேர் கொலை
இவ்வாண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதிமுதல் 20ஆம் திகதிவரை பங்ளாதேஷில் வாழும் சிறுபான்மையினர்மீது குறைந்தது 2,010 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக அந்நாட்டிலுள்ள சிறுபான்மையினர் மன்றம் தெரிவித்தது.
பங்ளாதேஷ் இந்து பௌத்த கிறிஸ்துவ ஒய்க்கியா மன்றம் என்ற அக்கூட்டமைப்பு, வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19) டாக்காவில் செய்தியாளர்களைச் சந்தித்தது.நாடு முழுதுமுள்ள தங்களது பிரதிநிதிகள் மூலம் தாக்குதல் குறித்த தரவுகளைத் திரட்டியதாக அதன் மூன்று தலைவர்களில் ஒருவரான நிர்மல் ரொசாரியோ கூறினார்.
அறுவர் அடங்கிய மத்தியக் கண்காணிப்புக் குழு, தரவுச் சேகரிப்பை மேற்பார்வை செய்தது.“அரசியல் வன்முறை சார்ந்த எந்த நிகழ்வுகளையும் எங்களது அறிக்கையில் சேர்க்கவில்லை. இது முழுக்கவும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பானது மட்டுமே,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அரசியல் சார்ந்தது என்றும் சமூகக் காரணங்களுக்காக அல்ல என்றும் அந்நாட்டு அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகம்மது யூனுஸ் செப்டம்பர் 5ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
சிறுபான்மையினர் மன்ற அறிக்கையின்படி, 68 மாவட்டங்களிலும் பெருநகர்ப் பகுதிகளிலும் 1,705 குடும்பங்கள் தாக்கப்பட்டன. அவற்றுள் 157 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டன; சேதப்படுத்தப்பட்டனமற்றும் தீக்கிரையாக்கப்பட்டன. சிலரது நிலங்களும் பறிக்கப்பட்டன.குல்னா வட்டாரத்தில் நான்கு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டன.
குறைந்தது 69 வழிபாட்டுத் தலங்கள், 915 வீடுகள், 953 வணிக நிறுவனங்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன, அல்லது கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் 21 தொழில் நிறுவனங்கள் பறித்துக்கொள்ளப்பட்டதாகவும் 38 பேர் உடல்சார்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும் மன்றத்தின் அறிக்கை கூறியது.
சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 50,000 பேர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமூகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 மில்லியன் பேர் தற்போது அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் நிர்மல் கூறினார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மேற்பார்வையில், சுதந்திரமாகவும் பாகுபாடின்றியும் அத்தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஊர்வலங்களும் பேரணிகளும் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.