நைஜீரியா: கடத்தப்பட்ட பள்ளி மாணவர்களில் 287 பேர் 16 நாட்களுக்கு பின் விடுவிப்பு
நைஜீரியாவின் சில பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆயுதக் குழுக்கள் கடத்திச் சென்று மிரட்டும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த 7ம் திகதி கதுனா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து கிட்டத்தட்ட 300 மாணவர்களை ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுப்படனர். கடத்தப்பட்ட மாணவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.
அதன்பின்னர் கடந்த வாரம், டோகன் நோமா சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், 14 பேரை கடத்திச் சென்றனர். இதேபோல் கஜுரு-ஸ்டேசன் சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தி 87 பேரை கடத்திச் சென்றனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக கதுனா மாநில ஆளுநர் இன்று தெரிவித்துள்ளார். கரிஜா நகரில் இருந்து கடத்தப்பட்ட 287 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி விடுதலை செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்ட நைஜீரிய அதிபருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஆளுநர் உபா சானி தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.