விண்வெளியில் அதிரடி காட்டத் தயாராகும் நியூசிலாந்து
விண்வெளியில் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் பாரிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெரிய அளவில் விண்வெளியில் செயல்படும் விரிவான திட்டங்கள் ஆராயப்படுவதாக, பசிபிக் பிராந்தியத்தின் நியூசிலாந்து விண்வெளித் துறை அமைச்சர் ஜூடித் கொலின்ஸ் (Judith Collins) தெரிவித்துள்ளார்.
AFP ஊடக நிறுவனத்துடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பல செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி, தேசிய நலன்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதே நியூசிலாந்தின் முக்கியக் குறிக்கோளாகும்.
இது குறித்து பல ஆண்டுகளாக நியூசிலாந்து அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
சட்டவிரோத மீன்பிடித்தல் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், இயற்கைப் பேரிடர்களின்போது மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இது உதவும்.
இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் பிற (ஏனைய) நாடுகளிடம் உதவி கோருவதைத் தவிர்க்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அறிவியல் துறைக்கும் வர்த்தகத்துக்கும் விண்வெளித்துறை தனிப்பெரும் வாய்ப்பளிக்கும். புதிய ஆய்வுகளும் செயற்கைக்கோள் பாகங்கள் தயாரிப்பும் இதன் மூலம் மேம்படும்.
எதிர்காலத்தில் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்வெளிக்கு அனுப்பும் சேவைகளை இதன்மூலம் செயல்படுத்த நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள மய்யா தீபகற்பம் ( Mahia Peninsula) தளத்தில் இருந்து பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





