அமெரிக்காவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா தொற்று – நிபுணர்கள் எச்சரிக்கை
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாறி அச்சுறுத்தி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய வடிவமான ஸ்ட்ரேடஸ் வேகமாக பரவி வருகிறது. மருத்துவ ரீதியில் XFG என அழைக்கப்படும் இந்த வகை, ஒரு கலப்பின வைரஸ் ஆகும்.
இது முதலில் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் தென்கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸை கண்காணிக்கப்பட வேண்டிய உருமாற்ற வகை என வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் முதல் முறையாக மார்ச் மாதம் பரவ தொடங்கியது.
பொதுவாக இந்த வைரஸ் குறைவான பாதிப்புகளை மட்டும் ஏற்படுத்துகிறது. ஆனால், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மற்றும் உடல் நலக்குறைவுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிவ்யோர்க், நியூ ஜெர்சி, டெலாவேர், வெர்மான்ட், மிச்சிகன், விஸ்கான்சின், மினிசோட்டா, மற்றும் வடக்கு மற்றும் தெற்கு டகோட்டா போன்ற மாகாணங்களில் இந்த வைரஸின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக அமெரிக்க சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முக்கியம் என்றும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.





