வாரத்திற்கு 4 நாட்கள் வேலை! உடல்-மன நலத்தில் மாற்றம் – புதிய ஆய்வில் வெளியான தகவல்

வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்தால், தொழிலாளர்களின் உடல்நலம், வேலைத் திறன் மற்றும் திருப்தி எல்லாவற்றிலும் கணிசமான மேம்பாடு காணப்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று உறுதியளிக்கிறது.
இந்த ஆய்வு, கடந்த ஜூலை 21 அன்று Nature Human Behaviour அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளில் உள்ள 141 நிறுவனங்களில் பணியாற்றும் 2,896 ஊழியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
ஆறு மாத காலத்தில், முழு ஊதியத்துடன் வாரத்திற்கு நான்கு நாள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட குழுவின் நிலைமைகளை, பாரம்பரிய ஐந்து நாள் வேலை வாரம் கொண்ட ஊழியர்களுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டது.
நான்கு நாள் வேலை வாரம் கொண்ட குழுவினர், ஐந்து நாள் வேலை செய்யும் குழுவை விட சிறந்த உடல் மற்றும் மன நலத்தை கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
வேலை திறன் மேம்பாடு, தூக்கப் பிரச்சினைகள் குறைவு, சோர்வின் அளவு வீழ்ச்சி ஆகிய முக்கிய மூன்று காரணிகள் இந்த மாற்றங்களை உறுதிப்படுத்தியவையகும்.
“வருமானத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், நான்கு நாள் வேலை வாரம் ஊழியர் நலனுக்கான பயனுள்ள நிறுவன நடவடிக்கையாக செயல்படுகிறது,” என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆய்வின் வரம்புகளில் குறிப்பிடத்தக்கது, பங்கேற்ற நிறுவனங்கள் நான்கு நாள் வேலை முறைமைக்கு தாங்களாக முன்வந்தது என்பதும், பெரும்பாலானவை ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள சிறிய நிறுவனங்கள் என்பதுமாகும். எனவே, இதனை பெரிய அளவில் மதிப்பீடு செய்ய, அரசாங்க ஆதரவுடன் சீரற்ற சூழ்நிலைகளில் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதும், நிறுவன உற்பத்தியும் குறையாமல் தொடர்வதும், நான்கு நாள் வேலை வாரம் ஒரு திறமையான மாற்றத்துக்கான சாத்தியமான தீர்வு என்பதை மீண்டும் ஒரு முறை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.