சிங்கப்பூரில் குடியுரிமை பெறும் முறையில் புதிய கட்டுப்பாடுகள்
சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை வழங்கும் போது குடிமக்களின் ஆயுட்காலம் மற்றும் வயதுக் கட்டமைப்பு போன்ற அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும் என அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட அனுமதி (Permanent Residency – PR) வழங்கும் போது இவ்வாறான அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை அனுமதி வழங்கப்படும் போது நாட்டின் கருத்தரிப்பு வீதத்தைத் தாண்டி வேறு அம்சங்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
குடியுரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து, குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிடம் பெறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாறுபடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடந்த ஜூன் மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் 3.66 மில்லியன் குடிமக்களும் 0.54 மில்லியன் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றவர்களும் வசித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டின் குடிமக்களின் எண்ணிக்கை 0.7 வீதம் அதிகரித்திருப்பதாக பிரதமர் அலுவலகத்தின் தேசிய மக்கள்தொகை மற்றும் திறனாளர் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





