இந்திய தூதுவருக்கு சீன மொழியில் புதிய பெயர்!
இந்திய – சீன உறவு ஈரான் போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே, அதாவது 2026 ஆம் ஆண்டு ஆரம்பித்திலேயே நெருங்க ஆரம்பித்துள்ளது.
குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்ட மணிகொன்றோல் (moneycontrol) என்ற ஆங்கில செய்தித் தளம், இந்திய – சீன உறவின் நெருக்கம் குறித்து சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளது.
இரு பெரிய எண்ணெய் கொள்வனவு நாடுகளான இந்தியாவும் சீனாவும், ஈரான் போரில் அமைதியை உருவாக்க சிறந்த தளம் என்று இச் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
எண்ணெய் வயல்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற இரு நாடுகளும் இணைந்து செயற்படும் சந்தர்ப்பம் உள்ளது எனவும் எடுத்துக் கூறியுள்ளது.
ஆகவே, இப்பின்புலத்தில், சீன மொழி பேசக்கூடிய ஒருவர் சீனாவுக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றாரா என்ற கேள்வியும் எழுகிறது.
புதிய இந்திய தூதராக ஸ்ரீ விக்ரம் கே. துரைசாமி (Shri Vikram K. Doraiswami) நியமனம் பெற்றுள்ளார்.
அவர் சீன மொழியில் வெய் ஜியாமெங் (Wei Jiameng) என தனக்கு புதிய பெயர் ஒன்றை சூட்டியுள்ளதாக குளோபல் ரைமஸ் (globaltimes) தெரிவித்துள்ளது.
புதிய இந்தியத் தூதர் தனக்கென ஒரு சீன பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பதை, சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் (Lin Jian) இன்று வெள்ளிக்கிழமை பாராட்டியுள்ளார்.
சீன பெயரை காரணப் பெயராக இட்டமை குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, லின் ஜியான் இவ்வாறு பாராட்டியிருக்கிறார்.
புதிய தூதுவர் பீஜிங்கில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், சீன-இந்திய உறவுகளின் நீடித்த முன்னேற்றம் ஏற்படும் என தான் நம்புவதாகவும் லின் ஜியான் எடுத்துக் கூறினார்.
தற்போது பிரித்தானியாவில் தூதுவராக பதவி வகிக்கும் துரைசாமி, இந்தி, சீன, பிரஞ்சு, கொரியன் ஆகிய மொழிகளில் சிறந்த தேர்ச்சியுள்ளவர்.
1992 இல் இந்திய வெளியுறவுச் சேவையில் இணைந்தார். 1996 ஆம் ஆண்டு பீய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இவருடை தந்தை ஒரு இராணுவ வீரர் என இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. உலக வர்த்தகததில் இந்திய – சீன வர்த்தகம் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-




