அகதிகள் ரஷ்யாவிலிருந்து பின்லாந்துக்குள் நுழைவதைத் தடுக்க புதிய சட்டம் பரிந்துரை
ரஷ்யாவிலிருந்து அகதிகள் பின்லாந்துக்குள் நுழைவதைத் தடுக்க ஃபின்லாந்து அரசாங்கம் அவசரகால சட்டத்தைப் பரிந்துரை செய்துள்ளது.
உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து பின்லாந்துக்குள் அகதிகள் நுழைவதை ரஷ்யா வேண்டுமென்றே அனுமதிப்பதாக ஃபின்லாந்து நம்புகிறது.
ரஷ்யாவை எதிர்த்துப் போரிடும் உக்ரேனுக்கு ஆதரவாகச் செயல்படும் நேட்டோவில் பின்லாந்து சேர்ந்தவுடன் 2023ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து பின்லாந்துக்குள் நுழையும் சிரியா, சோமாலியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரஷ்யாவுடனான 1,340 கிலோமீட்டர் தூர எல்லையை பின்லாந்து மூடியது.
அகதிகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.தனக்கு அவப்பெயரை உண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வதாக அது குறைகூறியது.
அடைக்கலம் நாடி வரும் அகதிகளின் விண்ணப்பங்களை ஆராயாமல் அவர்களைத் திருப்பி அனுப்ப பின்லாந்தின் ஆளும் கூட்டணி பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அவ்வாறு செய்வதால் பின்லாந்தின் அனைத்துலக உரிமைகள் கட்டுப்பாட்டை மீறுவதாகிவிடும் என்று பின்லாந்துப் பிரதமர் பெட்டேரி ஓர்ப்போ செய்தியாளர்களிடம் கூறினார்.
இருப்பினும், தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளில் மட்டுமே அவ்வாறு செய்யப்படும் என்றும் இந்த ஏற்பாடு தற்காலிகமானது என்றும் அவர் கூறினார்.