ரஷ்யாவின் இராணுவத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம்‘!
ரஷ்யாவின் இராணுவத்தை பற்றி தவறான தகவல்களை பரப்பும் நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த சட்டத்தில் ஜனாதிபதி புட்டின் இன்று (14.02) கையெழுத்திட்டுள்ளார்.
இந்த மசோதா ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் சபைகளில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மேல் சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
கீழ்சபையின் சபாநாயகர் வியாசஸ்லாவ் வோலோடின், இந்த நடவடிக்கையில் “நமது நாடு மற்றும் நமது துருப்புக்கள் மீது சேறு பூசும் துரோகிகளுக்கு” கடுமையான தண்டனையும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
புதிய பறிமுதல் சட்டம், “தீவிரவாத நடவடிக்கைகளை” பகிரங்கமாகத் தூண்டிவிட்டு, அரசின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது ஆயுதப் படைகளை “மதிப்பிழக்கச் செய்யும்” நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.