புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கை – ஆயுட்காலத்தை அதிகரிக்கும் கோவிட் mRNA தடுப்பூசிகள்
உலகளவில் பயன்படுத்தப்படும் பைசர் மற்றும் மொடர்னா (Moderna) கோவிட் தடுப்பூசிகளில் உள்ள mRNA தொழில்நுட்பம், சில புற்றுநோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஹூஸ்டனில் உள்ள எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் மையம் (MD Anderson Cancer Center in Houston) மற்றும் புளோரிடா பல்கலைக்கழக (University of Florida) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இது தொடர்பில் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வில், இந்தத் தடுப்பூசிகளைப் பெற்ற புற்றுநோய் நோயாளிகளின் ஆயுட்காலம் கணிசமாக அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நுரையீரல் அல்லது தோல் புற்றுநோய்க்கான நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்துகளைப் பெற்ற நோயாளிகள், சிகிச்சையைத் தொடங்கிய 100 நாட்களுக்குள் பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசியைப் பெற்றால், அவர்கள் கணிசமாக நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உதாரணமாக, தடுப்பூசி பெற்ற நுரையீரல் புற்றுநோய் நோயாளிகள், தடுப்பூசி போடப்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, புற்றுநோய் சிகிச்சையைத் தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் உயிர்வாழும் வாய்ப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நன்மை கோவிட் தொற்றுகளைத் தடுப்பதோடு மட்டும் தொடர்புடையது அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.
அதற்குப் பதிலாக, தடுப்பூசியில் உள்ள mRNA மூலக்கூறு, நோயெதிர்ப்பு செல்களைச் செயல்படுத்தும் ஒரு சைரன் போலச் செயல்படுகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
செலுத்தப்பட்ட mRNA மூலக்கூறு, நோயெதிர்ப்பு செல்களை மேலும் தூண்டி, புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்கும் திறனை மேம்படுத்துவதாகவும் தெரிகிறது.
இந்த நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கருத்தில் கொண்டு, ஆராய்ச்சிக் குழு தற்போது mRNA கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து மிகவும் கடுமையான ஆய்வை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.





