ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதி அறிமுகம் – ரஷ்யர்களுக்கு அதிரடி கட்டுப்பாடு
ரஷ்யக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான ஷெங்கன் விசா விதிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக்கியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தொடர்ச்சியான போர் மற்றும் ஐரோப்பிய எல்லைகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளுக்கமைய, ரஷ்யக் குடிமக்கள் இனிமேல் பல ஆண்டுகள் செல்லுபடியாகும் பலமுறை சென்றுவரக்கூடிய ஷெங்கன் விசாவைப் பெறுவது மிகக் கடினமாக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் ஒவ்வொரு பயணத்திற்கும் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.
மேலும், ரஷ்யக் குடிமக்களின் விண்ணப்பங்களை நெருக்கமாகவும் அடிக்கடி ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தணிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், சுதந்திர ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கும் ரஷ்யக் குடிமக்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்தவர்களுக்கு மட்டும் இந்த விதிகளிலிருந்து விதிவிலக்குகள் அளிக்கப்படும்.
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டிலேயே ரஷ்யாவுடனான விசா இணக்க ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.





