ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையை கட்டுப்படுத்த புதிய முயற்சி

ஜெர்மனியில் ரோபோடிக் கிச்சன் எனப்படும் சமையல் அறை அனைவரையும் கவர்ந்துள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறையுடன் உள்ள ஒரு மருத்துவமனையில் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் சூடான உணவுடன் தனது ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க ஆர்வமுள்ள ஒரு ஜெர்மன் மருத்துவமனை, உதவிக்காக ஒரு ரோபோ சமையலறையை தயாரித்துள்ளது.
செவிலியர்கள், மருத்துவர்களுக்கான உணவு தயாரிப்பிற்காக இந்த முயற்சியை TUEBINGEN பல்கலைக்கழக மருத்துவமனை நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு தேவையான உணவை தொடுதிரையில் தேர்வு செய்து, பணத்தை செலுத்தினால், அதனை சில நிமிடங்களில் தயாரித்து கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோடிக் கிச்சனுக்கு பலரது மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
குறைந்த விலையில் சுவையான உணவுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோபோடிக் கிச்சன் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது ஆசிய வகை உணவுகள் மட்டும் கிடைக்கும் நிலையில், விரைவில் பல்வேறு நாடுகளின் உணவுகளும் பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் 120 வெவ்வேறு உணவுகளை ரோபோ தயார் செய்கிறது என்று இயந்திரத்தின் தயாரிப்பாளர்களின் இணை நிறுவனர் GoodBytz கூறினார்.
ஜெர்மனியில் திறமையான தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது, குறிப்பாக ஒரு மருத்துவமனையில் பொதுவாக இருக்கும் ஒழுங்கற்ற வேலை நேரங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை நெருக்கடியாக உள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் வெற்றியை தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் இதனை அமுல்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.