மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கோவிட்-19 XFG வகை கிருமி
மலேசியாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களில் புதிய வகை கிருமி அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 43,087 நோயாளிகளில் கிட்டத்தட்ட 8.2% பேர் XFG என்ற புதிய வகை கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கிருமிப்பரவலைக் கண்காணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனைகள் மூலம் புதிய வகை தொற்றைச் சுகாதார அமைச்சு கண்டுபிடித்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் 35வது வாரத்தில் 49.5% சரிந்ததையும் டாக்டர் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 85,297 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கிருமிப்பரவல் தொடங்கிய 35வது வாரத்தில் தொற்றால் ஒருவர் உயிரிழ்ந்ததாகவும் டாக்டர் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர் 91 வயது முதியவர் என்றும் இவ்வாண்டு தொற்றால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் சொன்னார். இவ்வாண்டு ஜூன் 25ஆம் திகதி, XFG ரக கிருமியைக் கண்காணிப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்து இருந்தது.
அந்த ரகக் கிருமி எளிதில் பரவக்கூடியதாக இருக்கிறது என்றும் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் தன்மை கொண்டது என்றும் நிறுவனம் கூறியது.





