இங்கிலாந்தில் உருவாகும் புதிய நகரம் – ஒரு மில்லியன் மக்கள் வரை வசிக்கலாம்
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜுக்கு கிழக்கே, ஒரு மில்லியன் மக்கள் வரை வசிக்கக்கூடிய புதிய நகரத்தை உருவாக்கும் யோசனை பகுத்தறிவுடனும் ஆழமான பரிசீலனையுடனும்
உருவாக்கப்பட்டதாக திட்டத்தின் முன்னணி கட்டிடக் கலைஞர் தெரிவித்துள்ளார்.
நியூமார்க்கெட் (Newmarket) மற்றும் சஃபோல்க்கில் (Suffolk) உள்ள ஹேவர்ஹில் (Haverhill) இடையிலான விவசாய நிலத்தில் இந்த புதிய நகரத்தை உருவாக்குவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது.
‘ஃபாரஸ்ட் சிட்டி’ (Forest City) என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை தொழில்முனைவோர்களான ஷிவ் மாலிக் (Shiv Malik) மற்றும் ஜோசப் ரீவ் (Joseph Reeve) ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நகரத்தில் 45,000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 4 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும், அதில் 12,000 ஏக்கர் புதிய காடுகளுக்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை முறையான திட்ட வரைபடங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இடம் மக்கள்தொகை வளர்ச்சியை எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான பகுதியாகத் தெரிவதாக திட்டத்தின் பணிப்பாளர்கள் குழுவின் கட்டிடக் கலைஞர் ஸ்டீவ் மெக்காடம் கூறினார்.
அவரது முந்தைய பணிகளில் லண்டன் கிங்ஸ் கிராஸ் (King’s Cross) மறுவடிவமைப்பு மற்றும் லண்டன் ஒலிம்பிக் மாஸ்டர் பிளான் போன்ற முக்கிய திட்டங்கள் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
வழக்கமான புதிய நகரத் திட்டங்களிலிருந்து மாறுபட்ட முறையில் இந்த யோசனை உருவாகியதாகவும், இது எந்த உள்ளூர் வளர்ச்சி திட்டத்திலும்
இடம்பெறவில்லை என்றும், அரசின் நேரடி நிதியுதவியும் இல்லை என்றும் அவர் விளக்கினார்.
மேலும், பெரிய வீடு கட்டும் நிறுவனங்கள் இதற்குப் பின்னணியில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.





