6 மாத காலக்கெடுவை நிர்ணயித்த நேபாளத்தின் இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கி

நேபாளத்தின் இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கி, தனக்கும் தனது குழுவினருக்கும் அதிகாரத்தில் ஆர்வம் இல்லை என்றும், ஆறு மாதங்களுக்குள் நாட்டின் பொறுப்பை புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் சுஷிலா, “நானும் எனது அணியும் அதிகாரத்தை ருசிக்க இங்கு வரவில்லை. நாங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் தங்க மாட்டோம். புதிய நாடாளுமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கே.பி. சர்மா ஒலி அரசாங்கத்தை கவிழ்த்த ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய இளைஞர்களின் போராட்டங்களை சுஷிலா பாராட்டினார், மேலும் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்கள் “தியாகிகளாக” அங்கீகரிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுளளார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் 1 மில்லியன் நேபாள ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும் காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவுகளை இடைக்கால அரசு ஏற்கும் என்றும், அவர்களுக்கு நிதி உதவி செய்யும் என்றும் அறிவித்துள்ளார்.