இலங்கை கடல் வழியாக கடத்தப்பட்ட 11 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றல்: 3பேர் கைது
நேற்று கல்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவு கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 11 கிலோ 300 கிராம் தங்கத்தை கடத்திய 03 சந்தேக நபர்களுடன் டிங்கி படகு ஒன்று மடக்கி பிடிக்கப்பட்டது.
கடல் வழிகள் ஊடாக நிகழும் மோசமான செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில், கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றது.
இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக, வடமேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதிக்கு தங்கம் கடத்தல் மோசடி பற்றிய தகவலைப் பெற்றதன் பேரில், SLNS விஜயாவுடன் இணைக்கப்பட்ட சிறப்புப் படகுப் படையின் குழு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, பத்தலங்குண்டுவ தீவில் சந்தேகத்திற்கிடமான படகை இடைமறித்த கடற்படையினர், டிங்கி படகில் மறைத்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 11 கிலோ 300 கிராம் தங்கத்தை மீட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் மோசடியுடன் தொடர்புடைய 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்பிட்டியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர்கள் தங்கத்துடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.