தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை: வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு
வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களைக் கையாள்வதற்கான புதிய நடைமுறைத் தரநிலைகளை (SOP) அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கை இறுதி செய்யும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சீன ஆராய்ச்சி கப்பல்களின் வருகைக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இவ்வாறான கப்பல்களை அனுமதிப்பதில் நிலவும் இராஜதந்திர மற்றும் பூகோல அரசியல் சவால்களைக் கருத்திற்கொண்டு இந்த விசேட நடைமுறை வகுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வருடகாலமாக அமுலில் இருந்த ஆராய்ச்சி கப்பல்களுக்கான தடை அண்மையில் முடிவடைந்த போதிலும், புதிய நடைமுறைகள் உறுதி செய்யப்படும் வரை வெளிநாட்டு கப்பல்களுக்கு புதிய அனுமதிகள் வழங்கப்படமாட்டாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளுக்கு இடையில் சரியான சமநிலையைப் பேணும் வகையில் இந்த புதிய விதிமுறைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





