தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி கொள்கையை உருவாக்க திட்டம்: கொழும்பில் விசேட கூட்டம்!
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கொள்கையை உருவாக்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் இக்கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார்.
தேசிய பாதுகாப்பு நோக்கங்களை முன்னேற்றுவது பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையை உருவாக்குவது தேசிய பாதுகாப்பிற்காக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கிய மூலோபாயத் தேவையாகும்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் திறன்கள் மேம்படுத்தி, அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும் என்பது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, தேசிய பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
கூட்டத்தின் முடிவில், அனைத்து கொள்கை நோக்கங்களும் மேலோங்கி நிற்கும் தேசிய கொள்கையுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
பெறப்பட்ட கருத்துக்களை இணைத்து, வரைவுக் கொள்கையை மேலதிக மதிப்பாய்விற்காக முன்னெடுக்குமாறும் தொடர்புடைய குழுக்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள், குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





