பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதியில் சிக்கிய மர்மம்
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து குஷ் மற்றும் கொக்கேன் போதைப்பொருட்கள் இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பொதியானது பிரித்தானியாவிலிருந்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ராகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொதியிலிருந்து 65 கிராம் குஷ் போதைப்பொருளும், 500 மில்லிலீற்றர் கொக்கேன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 13 மில்லியன் ரூபா ஆகும்.
மேலும், விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட திரவ வடிவில் கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் முறை என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.