பெருவில் 22 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலையேறி உறைந்த நிலையில் கண்டெடுப்பு
பெருவில் உள்ள பனிமலை ஒன்றில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலையேறியின் சடலம் உறைந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகரித்து மலையில் உள்ள சில பகுதிகளில் பனி உருகியதாகவும் அதன் விளைவாக அதில் புதைந்து கிடந்த திரு வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பெருவின் காவல்துறை ஜூலை 8ஆம் திகதியன்று கூறியது.
ஸ்டாம்ஃபில்லைக் காணவில்லை என்று 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது.அப்போது அவருக்கு 59 வயது.
ஹுவாஸ்கரான் மலையில் அவர் ஏறிக்கொண்டிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டதாகவும் அதில் அவர் புதையுண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த மலையின் உயரம் 6,700 மீட்டருக்கும் அதிகம்.
ஸ்டாம்ஃபில்லைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.ஆனால் அவை பலனளிக்கவில்லை.
இந்நிலையில், 22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனபோது அவர் எப்படி இருந்தாரோ தற்போதும் அவரது சடலம் அப்படியே இருப்பதாக அதிகாரிகள் கூறினர். இதற்குப் பனியும் கடுங்குளிரும் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அவருடன் இருந்த அவரது உடைமைகளில் அவரது கடப்பிதழும் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதைக் கொண்டு அவர் அடையாளம் காணப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.