ரஷ்யாவில் பரவி வரும் மர்ம தொற்று…நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள்!
ரஷ்யாவில் மர்ம தொற்று நோய் ஒன்று பரவுவதாக தகவல் கசிந்துள்ள நிலையில், மருத்துவமனை வளாகங்களில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் காணப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிகாரிகள் தரப்பு வைரஸ் பரவல் தொடர்பில் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளதுடன், உண்மை நிலவரத்தை வெளியிடவும் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.ரஷ்ய இணையப்பயன்பாட்டாளர்கள் பகிர்ந்துள்ள காணொளிகளில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள தொற்று நோய் மருத்துவமனைகளுக்கு வெளியே நீண்ட வரிசையாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்துக்கிடப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, டிசம்பர் 17ம் திகதி ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளுக்கு தொடர்புடைய டெலிகிராம் செயலி குழு ஒன்று வெளியிட்ட காணொளியும் மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாஸ்கோவில் உள்ள இரண்டு தொற்று நோய் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான நோயாளிகள் நிமோனியா பாதிப்புடன் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஸா குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் மருத்துவமனையில் சுமார் 30 ஆம்புலன்ஸ்களும், இரண்டாவது மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் காணப்பட்டுள்ளன.
இதனிடையே, ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் மர்ம தொற்று வேகமாக பரவி வருகிறது என குறிப்பிட்டிருந்தது. ஆனால், தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் பல எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் வாகனங்கள் காணப்படுவது வாடிக்கையான ஒன்று தான் என ரஷ்ய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
24 வாகனங்கள் வரையில் மருத்துவமனை வளாகத்தில் காணப்படுவது, வாடிக்கையான ஒன்று தான், அதனால் அவசர சூழல் ஏற்பட்டுள்ளதாக கருத வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.