மியன்மார்- இடிபாடுகளிலிருந்து 5 நாள்களுக்குப் பின் உயிருடன் ஒருவர் மீட்பு ;3,000ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தில் சரிந்த கட்டட இடிபாடுகளிலிருந்து 5 நாள்கள் கழித்து நபர் ஒருவர் (ஏப்ரல் 2) உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மியன்மாரைச் சென்ற மாதம் 28ஆம் திகதி பதம்பார்த்த 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் வீடுகள் தரைமட்டமாகின. அதில் 2,700க்கும் அதிகமானோர் பலியானதோடு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை உயிருடன் மீட்பதற்கான நம்பிக்கை குறைந்துவந்த நிலையில் தலைநகர் நெப்பிடாவில் ஹோட்டல் இடிபாடுகளிலிருந்து நபர் ஒருவர் உயிருடன் காப்பாற்றப்பட்டார்.அந்த 26 வயது ஹோட்டல் ஊழியரை மியன்மார்-துருக்கியே மீட்புப் பணியார்கள் நள்ளிரவு தாண்டி மீட்டனர்.
குற்றுயிரும் கொலையுயிருமாய் இருந்த ஆடவரை இடிபாடுகளில் இருந்த ஒரு துளையின் மூலம் அதிகாரிகள் வெளியில் இழுத்தனர்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நிலநடுக்கத்தால் சரிந்த 30 மாடி கட்டடத்தின் இடிபாடுகளில் தேடல் பணிகள் தொடர்கின்றன.
கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தக் கட்டடம் சரிந்தபோது பல ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பேங்காக்கின் சட்டுச்சாக் வட்டாரத்தில் இடிந்துவிழுந்த கட்டடத்தின் கீழ் 70க்கும் அதிகமான உடல்கள் இருப்பதை அதிகாரிகள் படக்கருவிகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.இருப்பினும், எவ்வளவு ஆழத்தில் அந்த உடல்கள் காணப்பட்டன என்பதைப் படக்கருவியின் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
மிகப் பெரிய கான்கிரீட் இடிபாடுகளைக் கனரக வாகனங்கள் மூலம் மீட்புப் பணியாளர்கள் அகற்றியதை அடுத்து உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
புதிதாகக் கட்டப்பட்டுவந்த கட்டடத்தின் மாதிரி படம் இல்லாதது, அடர்த்தியான சுவர் ஆகியவை மீட்புப் பணிகளுக்குச் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.கடந்த நான்கு நாள்களில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டன.