இலங்கை செய்தி

முத்துநகர் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும் – கலீலுர் ரஹ்மான்!

மக்கள் தந்த ஆணைக்கு மதிப்பளித்து முத்து நகர் காணிகளை விவசாயிகளுக்கே அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும் என  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் முத்து நகர் காணி மீட்பு போராட்டகாரர்களுக்கு ஆதரவளித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  1972ம் ஆண்டு காலப்பகுதியில் முத்து நகர் காணிகள் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டது. வேறு பிரதேசங்களில் இருந்து வந்த மக்கள் இந்த காணிகளில் காலகாலமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.  ஆனாலும் அரச வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 1984ம் ஆண்டு துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு வெளியாகியது.

அந்த காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில்  11 கிராம நிலதாரி பிரிவுகளை சேர்ந்த காணிகள் துறைமுக அதிகார சபைக்கு  சொந்தமாக்கப்பட்டுள்ளது. இப்படி இருந்த போதிலும் 1972ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து முத்து நகர் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு விவசாய திணைக்களம் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கி அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.  அவர்களின் விவசாய நடவடிக்கையை மேம்படுத்த தேவையான சகல வசதிகளையும், சலுகைகளையும் செய்து கொடுத்துள்ளார்கள்.

கடந்த அரசாங்கங்கள் விட்ட பிழைகளை சுட்டிக்காட்டியே இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை பெற்றது. அதன் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டத்தில் அதிக முஸ்லிம் பிரதேசங்கள் முதன்முறையாக தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவை வழங்கினர். எனினும் துரதிஷ்டவசமாக அமைச்சரவை அமைச்சர் ஒருவர் முஸ்லிங்களுக்கு கிடைக்காமையால் அதனால் விரக்தியுற்ற மக்கள் இம்முறை உள்ளுராட்சி சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய ஆணையை குறைத்து கொண்டார்கள். இந்த நிலைக்கு மக்களை தள்ளியதும், இந்த பிரச்சினையை முஸ்லிம் அரசியல்வாதிகள் கையிலெடுக்க காரணமும் அரசாங்கத்தின் போக்கே தவிர வேறில்லை.

கடந்த காலங்களில் இந்த மக்களின் முத்து நகர் காணிகள் பிரச்சினைக்காக மக்களுடன் இணைந்து அதிகாரம் கிடைக்க முன்னர் போராடிய தேசிய மக்கள் சக்தியின் இன்றைய அரசியல்வாதிகள் அதிகாரம் கிடைத்த பின்னர் தடுமாறுகிறார்கள். இன்று தடுமாறும் இவர்கள் ஏன் அன்று மக்களுடன் இணைந்து போராடினார்கள் என்று கேட்க விரும்புகிறேன். 3:2 பெரும்பான்மையை கொண்ட பாராளுமன்றத்தையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும் கொண்டுள்ள இந்த அரசாங்கம் விவசாயம் செய்து வரும் முத்து நகர் காணிகளை மக்களுக்கு கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம். இதனை விவாதப்பொருளாக வைத்துகொண்டிராமல் மக்களின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும்.

சட்டவிரோத காணி என இப்போது கூறும் அரசாங்கத்தினர் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம் மக்களுடன் இணைந்து இந்த காணியை மீட்க போராடியது ஏன்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அன்று ஒரு கதையும், இன்று ஒரு கதையும் கூறும் தேசிய மக்கள் சக்தி திருகோணமலை அரசியல்வாதி மக்களை ஏமாற்றும் வேலைகளையே செய்கிறார். கடந்த காலங்களில் போராடியபோது கண்களை மூடிக்கொண்டா அவர் மக்களுடன் இணைந்து போராடினார். கடந்த காலங்களில் 04 முஸ்லிம் எம்.பிக்கள் அந்த மாவட்டத்தில் உச்ச அதிகாரத்தில் இருந்த காலத்தில் இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும். அவர்கள் விட்ட பிழையே மக்கள் இன்று கஷ்டப்பட காரணம்.

கடந்த கால ஏமாற்று அரசியல்வாதிகளை நிராகரித்தே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணை வழங்கினார்கள். அவர்களே மக்களை வீதிக்கு வரவழைப்பது நியாயமில்லை. நாட்டையும், நாட்டு வளங்களையும் பாதுகாப்பதில் எப்போதும் அர்ப்பணிப்பு மிக்க சமூகமான முஸ்லிம் சமூகம் இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் ஆயுதமேந்தியவர்களுக்கு பயந்து அரசாங்கம் ஒருதலை பட்சமாக நடப்பது முஸ்லிம் சமூகத்தை வேதனைக்குட்படுத்தியுள்ளது. முஸ்லிங்கள் வாழ்ந்த காணிகள் கூட இன்று காடாக அங்கு மாறியிருக்கிறது. அந்த காணிகளையும் கூட அரசாங்கம் விடுவிக்க முன்வர வேண்டும்.

ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் மீது அரச படைகளை கொண்டு அராஜகத்தை கட்டவிழ்த்து விடும் அரசாங்கம் அந்த மக்கள் விவசாய நடவடிக்கைகளை செய்யவிடாமல் குளங்களையும், விவசாய கிணறுகளையும் மூடி வருகிறார்கள். விவசாய நடவடிக்கை இடம்பெற்ற தடயங்கள் கூட அழிக்கப்பட்டு வருகிறது.

இவைகளை முழுமையாக நோக்கும் போது சர்வதேச அஜந்தாக்களுக்கு முத்து நகர் மக்கள் பலியாக்கப்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த மக்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் யுத்தத்தினால் இழந்த காணிகளையும் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை