4 இந்திய வீரர்களை மட்டும் ரீடெய்ன் செய்யும் மும்பை
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக, மும்பை அணி தரப்பில் 4 இந்திய வீரர்களை மட்டும் ரீடெய்ன் செய்ய ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய 4 வீரர்களையும் தக்க வைக்க முடிவு எடுத்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் மாதம் நடக்க உள்ளதால், அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அக்.31ஆம் தேதி மாலைக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியாலும் மொத்தமாக 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்களை ரீடெய்ன் செய்து கொள்ளலாம்.
அதேபோல் அதிகபட்சமாக 2 அன்-கேப்ட் வீரர்களை தக்க வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊதியமாக ரூ.4 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பை அணி தரப்பில் நிர்வாக ரீதியிலாகவே ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே தலைமைப் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் நீக்கப்பட்டு அவரது இடத்தில் ஜெயவர்தனே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பயிற்சியாளர் ஜெயவர்தனே மற்றும் நிர்வாகிகள் இணைந்து ரீடெய்ன் செய்யப்படும் வீரர்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை அணி தரப்பில் 4 இந்திய வீரர்களை தக்க வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
அதன்படி, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை ரீடெய்ன் செய்வதில் மும்பை அணி தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டன் என்பதோடு மட்டுமல்லாமல், மும்பை அணிக்காக 5 கோப்பையை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா.
அவர் 37 வயதை எட்டிவிட்டதால், ரோஹித் சர்மாவை வேறு அணிக்க விட்டுக் கொடுக்க மும்பை அணி நிர்வாகம் விரும்பவில்லை.
இதனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி ரீடெய்ன் செய்ய ஒப்புக் கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரையும் ரீடெய்ன் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இம்முறை மும்பை அணியில் அதிக ஊதியம் பெறும் வீரராக ஜஸ்பிரித் பும்ரா இருப்பார் என்று கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை விடவும் பும்ராவுக்கு அதிக ஊதியம் கொடுப்பதே சரியானது என்றும் பேசப்பட்டுள்ளது.
அதேபோல் உள்ளூர் வீரராக நேஹல் வதேராவை ரீடெய்ன் செய்யவும் ஆலோசிக்கப்படுகிறது.
ஆனால் ஆர்டிஎம் கார்டினை இஷான் கிஷனுக்கு பயன்படுத்த மும்பை அணி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 3 சீசன்களாக திலக் வர்மா மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனாலும் திலக் வர்மாவை ரிலீஸ் செய்யவே மும்பை அணி முடிவு எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதற்கு திலக் வர்மாவின் நடவடிக்கையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் கடந்த சீசனில் மும்பை அணி வீரர்களுக்கு இடையே மோதல் வந்த போது, ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக திலக் வர்மா செயல்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் திலக் வர்மாவை ரிலீஸ் செய்துவிட்டு அவருக்கு பதிலாக நேஹல் வதேராவை அந்த இடத்தில் விளையாட வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.