ஜப்பானில் பல வாகனங்கள் மோதி கோர விபத்து – ஒருவர் பலி, பலர் ஆபத்தான நிலையில்!
ஜப்பானில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவிலிருந்து வடமேற்கே சுமார் 160 கிலோமீட்டர் (100 மைல்) தொலைவில் மினகாமி (Minakami) நகரில் உள்ள விரைவுச் சாலையில் இன்று இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதில் 77 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த 26 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து அப்பகுதியூடான போக்குவரத்து தடை பட்டுள்ளதாகவும், சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேற்படி இரு வாகனங்களும் மோதிக் கொண்ட நிலையில், அதற்கு பின்னால் வந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக பனிப்பொழிவு விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்பு குழுக்கள் அவசரகால உதவிகளை வழங்கி வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.





