முல்லைதீவு-புதுக்குடியிருப்பில் எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டி.
புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் வருடாவருடம் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை போட்டியாக 4.30 மணியளவில் விக்னேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் செம்மலை உதயசூரியன் எதிர் கோயில் குடியிருப்பு ஜங்கஸ் அணிகள் பலபரீட்சையில் மோதின.
மேலும் இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் செம்மலை உதயசூரியன் 1 : 0 என்ற கோல்கணக்கில் முன்நிலையில் இருந்தனர்.
இடைவேளையின் பின்னரான ஆட்டம் விறுவிறுப்பை பெற்றது. போட்டி முடிவடைவதற்கு 2 நிமிடங்கள் முன்பதாக கோயில் குடியிருப்பு ஜங்கஸ் அணி கோல் ஒன்றினை போட்டு அணியினை சமப்படுத்தினர்.
போட்டி நிறைவில் 1 : 1 என்ற கோல்கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
போட்டியின் வெற்றியினை தீர்மானிக்கும் வகையில் 5 வீரர்களை கொண்ட தண்ட உதை வழங்கப்பட்டது. அதில் செம்மலை உதயசூரியன் அணியினர் 4: 3 என்ற கோல் கணக்கில் சம்பியன் பட்டத்தை தமதாக்கிக் கொண்டனர்.
ஆட்டநாயகனாக உதயசூரியன் அணியின் எடிசன் , தொடர் ஆட்டநாயகனாக ஜங்கஸ் அணியின் ஜனோஜ், சிறந்த கோல்காப்பாளராக உதயசூரியன் அணியின் கோல்காப்பாளர், சிறந்த அணியாக, ஒழுக்க நன்நடத்தையாக சிலாவத்தை இளம்பறவை அணியினர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான பரிசில்களும் இறுதியில் வெற்றிபெற்றவர்கட்கு காசோலையும் கேடயங்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இப்போட்டியில் சட்டத்தரணி கெங்காதரன், முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சங்க தலைவர் ஜெயபாபு , மலேரியா தடுப்பு இயக்க பிராந்திய வைத்திய அதிகாரி தயானந்தரூபன், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை வைத்தியர் பரணிதரன், தொற்றுநோய் பிராந்திய வைத்திய அதிகாரி விஜிதரன், கோம்பாவில் கிராம அலுவலர் தமிழ் செல்வன் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஜனமேயந், குகன், புலம்பெயர் வாழ் உறவுகள் மற்றும் கழக வீரர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.