காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் பலி ; பாலஸ்தீன சுகாதார அமைச்சகம்

காஸா மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) அதிகாலை நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாகக் கடந்த பல வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் அதுதொடர்பான தீர்வை எட்ட இருதரப்பும் தவறின.இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பான முயற்சிகளை அடியோடு நிறுத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காஸாவெங்கும் பல இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் வடகாஸா, காஸா நகரம், பயிர் அல் பலா, கான் யூனிஸ், ரஃபா, காஸா முனை ஆகியவை அடங்கும்.உயிரிழந்தோரில் பலர் சிறுவர்கள் என்று பாலஸ்தீனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தனது மூத்த பாதுகாப்பு அதிகாரியான மஹ்முட் அபு வட்ஃபா உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பு செய்தி வெளியிட்டது.தேவை இருக்கும் வரை தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.வான்வழித் தாக்குதலுடன் நிறுத்தப்போவதில்லை என்று அது எச்சரிக்கை விடுத்தது.
கடந்த சில வாரங்களாக, ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த தனிநபர்களையும் போராளிகளையும் குறிவைத்து ஆள் இல்லா வானூர்தித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது.ஆனால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) நடத்தப்பட்ட தாக்குதல் பேரளவில் இருந்தது.காஸா போரை அது மீண்டும் கண்முன் நிறுத்தியது.
போர் நிறுத்த உடன்படிக்கையை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஹமாஸ் அமைப்பு அதிருப்திக் குரல் எழுப்பியது.எனவே, அதன் பிடியில் இருக்கும் 59 பிணைக்கைதிகளின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை.
இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு குற்றம் சாட்டினார்.
“ராணுவப் பலத்தைக் கொண்டு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இனி முழுவீச்சுடன் செயல்படும்,” என்று இஸ்ரேலியப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எஞ்சியுள்ள 59 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன.ஆனால், போர் நிரந்தரமாக முடிவுக்கு வர வேண்டும் என்றும் காஸாவிலிருந்து தனது படைகளை இஸ்ரேல் முழுமையாக மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஹமாஸ் கூறி வருகிறது.