கண் வில்லைகள் இறக்குமதியில் 10 கோடிக்கும் அதிகமாக நிதி மோசடி! சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கைக்கு கண் வில்லைகளை இறக்குமதி செய்ததில் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கணக்காய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு சுமார் ஒரு இலட்சம் கண் வில்லைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் சுமார் 10 கோடி ரூபா ஊழல் நடந்துள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ அண்மையில் இது தொடர்பில் வெளிப்படுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன் பின்னர் சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கமைய, சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பித்த முறைப்பாட்டில், குறைந்த விலையில் கண்வில்லைகளை வழங்குவதற்கான விலைமனு கோரலுக்கு பதிலாக, அதிக விலையில் வாங்குவதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் கொள்வனவு குழுவிற்கு விசேட அனுமதியொன்றை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகமொன்றிக்கு தெரிவித்துள்ளார்.