பிரித்தானியா முழுவதும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை
பிரித்தானியாவின் பெரும்பகுதியை கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி வாட்டி வரும் நிலையில், நாடு முழுவதும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், ஆண்டின் முதல் புயலான ‘கோரெட்டி’ (Storm Goretti) நாளை வியாழக்கிழமை பிரித்தானியாவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தால் வேல்ஸ் மற்றும் மத்திய இங்கிலாந்து பகுதிகளில் 5 முதல் 20 சென்டிமீட்டர் வரை பனி குவியக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த புயலானது ‘வெதர் பாம்’ (Weather Bomb) எனப்படும் தீவிர நிலையை எட்டக்கூடும் என்பதால், பலத்த காற்று மற்றும் மின்தடை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பனிச்சறுக்கல் மற்றும் வீதிகளில் தேங்கும் பனிக்கட்டிகளால் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்பதால் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ள 450-க்கும் மேற்பட்ட தபால் குறியீட்டு (Postcode) பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தலா 25 பவுண்டுகள் ‘கோல்ட் வெதர்’ (Cold Weather Payment) நிதியுதவி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.





