இலங்கை: ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!
மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக ரூ. 3,000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒக்டோபர் மாத இடைக்கால கொடுப்பனவு ஏன் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படவில்லை என கேட்டறிந்த ஜனாதிபதி, அதற்கான தொகையை அடுத்த வாரத்திற்குள் வரவு வைக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இடைக்காலக் கொடுப்பனவான 3,000 ரூபாய் ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்
ஒக்டோபர் மாத ஓய்வூதியம் ஏற்கனவே ஓய்வூதியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதால், இடைக்கால கொடுப்பனவை ஒரு வாரத்திற்குள் தனித்தனியாக வரவு வைக்குமாறு உத்தரவிட்ட ஜனாதிபதி, அடுத்த மாதம் முதல் மாதாந்திர ஓய்வூதியத்துடன் அதனை உள்ளடக்குவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.