செயற்கை கருவூட்டல் சிகிச்சையின் போது நடந்த தவறு; இந்தியப் பெண்ணுக்கு இழப்பீடு
சுவிட்சர்லாந்தில் வாழும் இந்தியப் பெண் ஒருவருக்கு செயற்கை கருவூட்டல் சிகிச்சையின்போது நடந்த தவறுக்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் தற்போது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருகிறார். இயற்கையாக கருத்தரிக்காததால், அவர் செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார்.
இந்திய மருத்துவமனை ஒன்றில், பயாப்சி சோதனைக்காக அந்தப் பெண்ணின் உடலிலிருந்து திசு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்களில் சோதனை முடிவுகள் வெளியாகும் என்று மருத்துவர்கள் கூற, சுவிட்சர்லாந்துக்கு திரும்பி, பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்திருக்கிறார் அவர்.
பரிசோதனை முடிவுகளுக்காக அந்தப் பெண் காத்திருந்த நிலையில், அந்த மருத்துவமனையிலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.அதாவது, அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுவை, அந்த மருத்துவமனை ஊழியர்கள் முறைப்படி பாதுகாத்து வைக்காததால், அந்த திசு பாதிக்கப்பட்டுள்ளது.அதனால், அந்தத் திசுவை பரிசோதனைக்கு உட்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகள் வரும் என காத்திருக்கும்போது மருத்துவமனையின் கவனக்குறைவால் மீண்டும் இந்தியா செல்லும் நிலை உருவாகவே, தான் சிகிச்சைக்காக செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் அவர்.ஆனால், பணத்தைத் திரும்பத் தரமுடியாது என்று கூறிவிட்ட மருத்துவமனை, அதற்கு பதிலாக அவர் எப்போது இந்தியா வந்தாலும் அந்த சிகிச்சையை இலவசமாக மீண்டும் செய்து தருவதாகக் கூறியுள்ளது.
அதை ஏற்க மறுத்து, நுகர்வோர் நீதிமன்றம் சென்றுள்ளார் அந்தப் பெண். மருத்துவமனை தன் சேவையில் குறைவுப்பட்டதாகத் தெரிவித்த நுகர்வோர் நீதிமன்றம், அவரது விமான செலவுக்கான தொகை உட்பட, இழப்பீடாக ரூபாய் 47,991ஐ வட்டியுடன் செலுத்துமாறு மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.