சிங்கப்பூரில் மறைந்த ஆ.பழனியப்பனுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்
சிங்கப்பூரில் மறைந்த நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளரும் சமூக சேவையாளருமான ஆ. பழனியப்பனின் சேவைகளைப் போற்றி நாடாளுமன்றத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த மே 4ஆம் தேதி 73 வயதில் காலமான திரு பழனியப்பனுக்கான இரங்கல் உரையுடன் தொடங்கிய நேற்றைய கூட்டத்தில், அவரின் நாடாளுமன்றப் பங்களிப்புகளையும் சமூக சேவை களையும் மெச்சிப் பேசினார் பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான இந்திராணி ராஜா.
“தமிழ்மொழி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளும் மொழிபெயர்ப்பும் என்றும் நிலைத்திருக்கும்,” என்றார் குமாரி இந்திராணி ராஜா.
கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பணிபுரிந்த அவர், தன்னுடைய பணிக் கடமைகளுக்கு அப்பால் பல சூழல்களில் வெளிநாட்டு பிரமுகர்களைச் சிறப்புடன் கவனித்துக்கொண்டதற்காக பலமுறை பாராட்டுப் பெற்றுள்ளார்.
வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் வெளிவந்த ‘சொல்வளக் கையேடு’ உட்பட பல மொழிசார் படைப்புகளையும் மொழிபெயர்ப்புப் பணிகளையும் செய்துள்ளார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
“மொழியாளுமைமிக்க திரு பழனியப்பன், தமிழ்மொழிக்காகவும் பல இந்திய சமூக அமைப்புகளுக்காகவும் தொண்டாற்றியுள்ளார். நாடாளுமன்றத்தி லும் அரசாங்கப் பணிகளிலும் முனைப்பு டன் பங்காற்றிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது,” என்று உள்துறை அமைச்சரும் சட்ட அமைச்சருமான கா சண்முகம் தமிழ்முரசிடம் கூறினார்.
“பாலா என அன்புடன் அழைக்கப்படும் திரு.பழனியப்பன் நாடாளுமன்ற வளாகத்தில் எல்லாருக்கும் தெரிந்த, நட்பான முகம். தமிழ் மொழியின் மீது ஆழ்ந்த மதிப்பும் அன்பும் கொண்ட சமூகத்தின் மதிப்பிற்குரியவர். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மொழியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர்,” என்றார் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்.
நாடாளுமன்றத்தில் அவரது இருக்கையில் அவர் நினைவாக நேற்று மலர்ச்செண்டு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“என் அப்பா செய்த பல உதவிகளை அவரது இறுதிச் சடங்கில்தான் நாங்கள் தெரிந்துகொண்டோம். பல தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நன்றி செலுத்தியதே என் அப்பா வாழ்ந்த நல்வாழ்க்கையின் அடையாளம். நாடாளுமன்றத்தில் அவருக்காக அளித்த அஞ்சலி நெகிழ்ச்சியளிக்கிறது,” என்று அவரின் மகள் திருவாட்டி பத்மா பழனியப்பன் தெரிவித்தார்.