இலங்கை: ஜனாதிபதி ரணிலுக்கு அமைச்சர் காஞ்சனா ஆதரவு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான காஞ்சன விஜேசேகர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
SLPP பாராளுமன்றக் குழுவின் பெரும்பான்மையினரும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ‘X’ ல் தெரிவித்துள்ளார்.
அதிக பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளை தொடர ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சமீபத்திய உறுப்பினர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆவார்.
இன்று முன்னதாக, SLPP பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட குழுவும் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேன தெரிவித்தார்.
ஹோமாகமவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பந்துல குணவர்தன ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.
நேற்றைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலிட்பீரோ கூட்டம் குறித்த விபரங்களை வழங்கிய அமைச்சர் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 11 உறுப்பினர்கள் கட்சிக்கு சொந்த வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது சொந்த வேட்பாளரை நிறுத்தவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவும் தீர்மானித்த வேளையிலேயே SLPP உறுப்பினர்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதே நேரத்தில் வேட்புமனுக்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும். (நியூஸ்வயர்)