முக்கிய துறையில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் Microsoft
முன்னணி ஆன்லைன் கேம் நிறுவனமான ஆக்டிவேஷன் ப்ளீஸ்ஸார்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆன்லைன் கேம் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக மாறி உள்ளது.
உலகின் முன்னணி நிறுவனமாக உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் கால்பதிக்கும் துறைகளில் எல்லாம் மாபெரும் வெற்றியை சுவைத்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஆக்டிவேஷன் ப்ளீஸ்ஸார்ட் என்ற ஆன்லைன் கேம் நிறுவனத்தை 68.7 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. மிகப்பெரிய தொகையை கொடுத்து நடைபெற்ற இந்த கையகப்படுத்தும் பணி உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கிய நடவடிக்கையாகவும் பார்க்கப்பட்டது.
அதே நேரம் பிரிட்டனைச் சேர்ந்த ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான வாட்ச்டாக் இந்த கையகப்படுத்தல் ஒப்பந்தத்திற்கு தடை விதித்தது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் ஆக்டிவேஷன் ப்ளீஸ்ஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதை அடுத்து தொடர் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நேற்று வாட்ச்டாக் அமைப்பு மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்டிவேஷன் ப்ளீஸ்ஸார்ட் நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி, தடையை நீக்கியது.
இதன் மூலம் உலகின் முன்னணி ஆன்லைன் கேம் நிறுவனமாக மைக்ரோசாப்ட் உருவெடுத்து இருக்கிறது. மேலும் ஆன்லைன் கேம் நிறுவனங்களில் சீனா, கொரியா, ஜப்பான் நாடுகளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆன்லைன் கேம்களை கையாள்வதற்கு ஏற்கனவே எக்ஸ் பாக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆக்டிவேஷன் ப்ளீஸ்ஸார்ட் நிறுவனத்தை சொந்தமாக வாங்கியதன் மூலம் பல்வேறு வகையான புதுமையான கேம்களை உருவாக்கும் பணியை டெவலப்பர்கள் தொடங்க இருக்கின்றனர். மேலும் பல முன்னணி கேம்களை தனக்குள் கொண்டிருக்கக்கூடிய இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இருப்பதன் மூலம் இதன் வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான முன்னணி கேம்களை பெற உள்ளனர்.