மெக்சிகோவின் ஷீன்பாம் கடதல் கும்பலுக்கு பயந்து அமெரிக்க துருப்பு சலுகையை மறுத்துவிட்டார் – டிரம்ப்

மெக்சிக்கோவில் போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க அமெரிக்கா அதன் ராணுவத் துருப்புகளை அனுப்ப முன்வந்ததை அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.ஆனால் அதை நிராகரித்துவிட்டதாக மெக்சிக்கோ அதிபர் குளோடியா ஷெயின்பம் தெரிவித்தார்.
ஃபுளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அதிபர் டிரம்ப் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆயிரக்கணக்கானோரின் மரணத்துக்குக் காரணமான போதைப் பொருள் கடத்தல் கும்பல்களில் உள்ளோர் மோசமானவர்கள் என்ற டிரம்ப், மெக்சிக்கோவுக்கு வீரர்களை அனுப்ப முன்வந்ததாகக் குறிப்பிட்டார்.
“மெக்சிக்கோவுக்கு உதவித் தேவைப்படும் என்றால் உள்ளே சென்று உதவ நான் தயாராக இருக்கிறேன்,” என்றார் டிரம்ப்.
ஷெயின்பம் தமது உதவியை நிராகரித்தது குறித்து கருத்துரைத்த அவர், “மெக்சிக்கோவின் அதிபர் நல்ல பெண்மணி ஆனால் கடத்தல் கும்பலைப் பற்றிய பயம் அதிகமாக இருப்பதால் அவரால் சரியாக யோசிக்க முடியவில்லை,” என்றார்.
டிரம்ப்பின் உதவியை நிராகரித்ததாக சனிக்கிழமை கூறிய திருவாட்டி ஷெயின்பம், “அரசுரிமை விற்பனைக்கு அல்ல,” என்றார்.
அமெரிக்காவும் மெக்சிக்கோவும் ஒன்றிணைந்து செயல்படலாம். ஆனால் மெக்சிக்கோ ஒருபோதும் அமெரிக்கத் துருப்புகளைத் தனது எல்லைக்குள் இருக்க அனுமதிக்காது என்று திருவாட்டி ஷெயின்பம் வலியுறுத்தினார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை முறியடிப்பதில் அமெரிக்கா தெளிவாக இருக்கிறது என்று அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை முறியடிப்பதில் மெக்சிக்கோ தோற்றுப்போனால் அமெரிக்கா ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கையை எடுக்கும் என்று திரு டிரம்ப் சூளுரைத்தார்.