மெக்சிகோ ஜனாதிபதி தேர்தல் ; பிரச்சாரத்தின் போது சரிந்து விழுந்த மேடை – 09 பேர் பலி!
மெக்சிகோவில் ஜனாதிபதி வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் பிரச்சார நிகழ்வில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.
மெக்சிகோவில் வரும் ஜூன் 2ம் திகிதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது, குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் பிரச்சார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அமைப்புகள் சரிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்தில் தனது குழு உறுப்பினர்களும் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆளும் கட்சி வேட்பாளர் கிளாடியா ஷீன்பாம், எதிர்க்கட்சி கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சோச்சிட்ல் கால்வேஸ் ஆகியோர் முறையே, போட்டியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றனர்.